Select Location
All Locations
State
Region
City / District
“ஒலிம்பிக்கின் பாதி விளையாட்டுகளில் நாம் பங்கேற்பதில்லை” - பிரதமர் மோடி கவலை

“ஒலிம்பிக்கின் பாதி விளையாட்டுகளில் நாம் பங்கேற்பதில்லை” - பிரதமர் மோடி கவலை

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் இடம்பெறும் விளையாட்டுகளில் பாதியில்கூட நாம் பங்கேற்பதில்லை என்று கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த காலங்களில் பங்கேற்காத ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்பதன் மூலம் மட்டுமே ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாடு மேம்படும் என்று தெரிவித்துள்ளார். விளையாட்டு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தவாறு விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் வர உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் விளையாட்டு தினத்துக்கான எனது வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நான் ஆற்றிய உரையில், விளையாட்டுத் துறை குறித்தும் நாட்டின் கவனத்தை ஈர்த்தேன். விளையாட்டுப் பற்றி நான் பேசும்போது அது வெறும் பதக்கங்களை வெல்வதைப் பற்றியது மட்டுமல்ல. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இந்தியாவின் விளையாட்டுத் திறனையும் இளைஞர் சக்தியையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு முன்னெடுப்பு இது. இன்றைய நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். உலக விளையாட்டு வரைபடத்தில் சிறந்து விளங்கும் ஆற்றல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உள்ளது. இந்த ஆற்றலைப் புரிந்துகொண்டு நாம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பாதிக்கும் குறைவானவற்றில் மட்டுமே இந்திய அணிகள் பங்கேற்கின்றன. பதக்கப் பட்டியலில் ஒரு பெரும் பகுதிக்கு நாம் போட்டியிடுவதே இல்லை. இது பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. 2012 ஒலிம்பிக்கில் இந்தியா 13 விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றது. 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் நாம் பங்கேற்கவே இல்லை.


Hindu Tamil 2 days ago
Home Flash News