Select Location
All Locations
State
Region
City / District
ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்வு

ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்வு

புதுடெல்லி: ரூ.100 கோடிக்கு மேல் வரு​மானம் ஈட்​டிய இந்தியர்களின் எண்​ணிக்கை 2025-26-ல் 576 ஆக உயர்ந்​துள்ளதாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் உறுப்​பினரின் கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி நேற்று அளித்த பதில் வரு​மாறு: வரு​மான வரித் தாக்​கல் கணக்​கு​களின்​படி, ரூ.100 கோடி மற்​றும் அதற்கு மேல் வரு​மானம் ஈட்​டிய தனி​நபர்​களின் எண்​ணிக்​கை, கடந்த 5 ஆண்​டு​களில் 4 மடங்​குக்கு மேல் அதிகரித்துள்​ளது. இந்த எண்​ணிக்கை 2022-23-ல் 301 ஆகவும், 2023-24-ல் 284 ஆகவும், 2024-25-ல் 415 ஆகவும் இருந்​து. தற்​போது 2025-26-ம் ஆண்​டில் 576 ஆக உயர்ந்​துள்​ளது. வரு​மான வரிச் சட்​டம் 2025 அல்​லது முந்​தைய வரு​மான வரிச் சட்டம் 1961-ன் கீழ் ‘கோடீஸ்​வரர்’ என்ற சொல்​லுக்கு சட்​டப்​பூர்வ வரையறை எது​வும் இல்​லை. மேலும் 2016 ஏப்​ரல் 1 முதல் ‘சொத்து வரிச் சட்​டம், 1957’ ரத்து செய்​யப்​பட்டு விட்​ட​தால், கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு பற்​றிய தரவு​களை அரசு பராமரிப்​ப​தில்​லை.

சமீபத்​திய குடும்ப நுகர்​வுச் செல​வினக் கணக்​கெடுப்​பின்​படி, கிராமப்​புறங்​கள், நகர்ப்​புறங்​கள் இரண்​டிலுமே வரு​மான ஏற்றத் தாழ்வு குறைந்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. 15 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்​டோருக்​கான வேலை​யின்மை விகிதம் 2022-ல் 3.6 சதவீத​மாக இருந்​தது. 2025-ல் இது 3.1% ஆக குறைந்​துள்​ளது. நிதி ஆயோக் தரவு​களின்​படி கடந்த பத்​தாண்​டு​களில் வறுமை​யும் குறிப்​பிடத்​தக்க அளவில் குறைந்​துள்​ளது. முற்​போக்​கான வரு​மான வரி நடை​முறை, வேலை​ வாய்ப்​புடன் இணைக்​கப்​பட்ட வரிச் சலுகைகள், ஸ்டார்ட்​-அப்​கள், கூட்​டுறவு அமைப்​பு​களுக்​கான ஆதரவு மற்​றும் இருப்​பிடம், சுகா​தா​ரம், திறன் மேம்​பாடு, கிராமப்​புற வாழ்​வா​தா​ரத்தை மைய​மாகக் கொண்ட நலத்​திட்​டங்​கள் மூலம் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய பொருளா​தார வளர்ச்​சியை அரசு ஊக்​கு​வித்து வரு​கிறது. இவ்வாறு அவர் கூறி​னார்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News