Select Location
All Locations
State
Region
City / District
E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!

E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!

மத்திய அரசின் E20 எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் தானும் தனது குடும்பத்தினரும் பெருமளவில் லாபம் அடைவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறு வீடியோக்கள் மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) உள்ளடக்கங்களுக்கு எதிராக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நீதிமன்ற அனுமதி: இந்த அவதூறு உள்ளடக்கங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் தளங்கள் நீதிமன்ற எல்லைக்கு வெளியே இருப்பதால், அவர்கள் மீது வழக்குத் தொடுக்க அனுமதி கோரி நிதின் கட்கரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அபய் அஹுஜா, மெட்டா, கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடர கட்கரிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அவதூறு குற்றச்சாட்டுகள்: சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதோடு, இந்த எத்தனால் கொள்கையின் மூலம் அமைச்சர் நிதின் கட்கரியும் அவரது குடும்பத்தினரும் நிதி ரீதியாகப் பயனடைகிறார்கள் என்ற தவறான செய்திகளும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான 'டீப்ஃபேக்' வீடியோக்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

நிதின் கட்கரி தரப்பு விளக்கம்: எத்தனால் கலப்பு தொடர்பான E20 கொள்கை மற்றும் அதன் நிர்வாகம் முழுமையாக 'மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்' கட்டுப்பாட்டில்தான் வருகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இதற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை.

தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும், இதன் மூலம் தனிப்பட்ட முறையிலோ அல்லது குடும்பத்தின் மூலமாகவோ பெருமளவு லாபம் அடைவதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற பொய் என்றும் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். முன்னதாக, தவறான தகவல்களைப் பரப்பியதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் உட்பட சில சமூக வலைதளப் பிரபலங்கள் மீது நாக்பூர் சைபர் பிரிவு போலீஸார் BNS சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனினும், இது தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், தன் மீதான அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் நிதின் கட்கரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


Malaimalar 2 hours ago
Home Flash News