Select Location
All Locations
State
Region
City / District
“பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” - அமைச்சர் ராஜ்மோகன்

“பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” - அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை: “ஒருநாள் திரை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, “தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் வெகு விரைவில் அமலுக்கு வரும். இது குழந்தை மைய கல்வியாக இருக்கும். இந்த பாடத்திட்டத்தில் பெண்ணுரிமை, மண்ணுரிமை, தமிழ் - தமிழர் நலன், பெண்களை மதிப்பது, பெற்றோரை மதிப்பது, பாடப் புத்தக சுமையை குறைப்பது ஆகியவை அடங்கும். வெகு விரையில் தமிழகத்தின் மொத்த கல்வித் திட்டமும், குழந்தை மைய கல்வியாக மாறப் போகிறது.

நீட் ஒழிப்பே எங்கள் கொள்கை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதன் மூலமே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். தமிழகத்தில் பல இடங்களில் நீட் தேர்வுக்கு ஆதரவாக போராடுகிறார்கள். அவர்களுக்கு எங்களின் முழுமையான ஆதரவு உண்டு. போராடும் இளைஞர்களை போலீஸார் அச்சுறுத்தக் கூடாது என அரசு சார்பில் அறிவுறுத்தியுள்ளோம்” என்றார். ‘தமிழக அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும், வன்னி அரசு தவிர மற்றவர்கள் யாரும் தலித் பிரச்சினைகளுக்கு பெரிதாக குரல் கொடுக்கவில்லை’ என்ற இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு பதிலளித்த அவர், “பதிலுக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்காது. நமக்குள் சண்டை போட்டால் நோக்கம் சிதைந்து போகும். ஒருநாள் ரஞ்சித்தின் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவதுதான் இதற்கான பதில்” என்று கூறினார்.


Hindu Tamil 13 hours ago
Home Flash News