‘கோவை செம்மொழி பூங்கா பணியில் ரூ.40 கோடி முறைகேடு’ - மேயர் பதிலளிக்க வலியுறுத்தி அமளி
கோவை: கோவை செம்மொழி பூங்கா பணியில் ரூ.40 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி மேயர் பதிலளிக்க வலியுறுத்தி கவுன்சிலர்கள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கவுன்சிலர் 2 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்தும் கூட மாமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டதால், கூட்டத்தை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் உத்தரவிட்டார். கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று (ஜூலை 17) தொடங்கியது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், மண்டல அலுவலகங்களில் மனைவரன் முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். கவுன்சிலர் காயத்ரி செம்மொழி பூங்காவில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை 2 மாத காலத்துக்கு பணியிடை நீக்கம் செய்தார் மேயர். அமளி குறையாத நிலையில் கூட்டத்தை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் உத்தரவிட்டார். காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்: இதற்கிடையில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு இன்று அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், பிரபாகரன், சர்மிளா ஆகியோர் காலி குடங்களுடன் வந்தனர். அப்போது அவர்கள் மாநகராட்சியில் பல பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது என குற்றம் சாட்டினர்.