கட்சியின் உண்மை விசுவாசிகளுக்கே உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு: பழனிசாமி திட்டவட்டம்
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஈரோடு, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: அனைத்து நிர்வாகிகளும் உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும். இத்தேர்தலில், கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
அத்தகைய நபர்களை மட்டுமே நிர்வாகிகள் பரிந்துரை செய்ய வேண்டும். கட்சியை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பெருந்துறை இடைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று ஈரோடு அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்டச் செயலாளர்கள் செல்வராஜ் (ஈரோடு புறநகர் மேற்கு), கே.சி.கருப்பணன் (ஈரோடு புறநகர் கிழக்கு) மற்றும் தேர்தலுக்குப் பிறகு பழனிசாமி எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த எம்எல்ஏக்கள் ஹரி பாஸ்கர் (அந்தியூர்), கோ.அரி (திருத்தணி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.