Select Location
All Locations
State
Region
City / District
ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அறநிலையத் துறை, பத்திரப் பதிவு துறை அமைச்சர்கள் உறுதி

ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அறநிலையத் துறை, பத்திரப் பதிவு துறை அமைச்சர்கள் உறுதி

சென்னை: சார்பதிவாளரின் கவனக்குறைவால் பதிவுசெய்யப்பட்ட பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரூ.100 கோடி மதிப்பிலான பழநி கோயில் நிலம் முறைகேடாக பதிவாகியுள்ளதாக தவறான நோக்கத்துடன் செய்தி பரப்புகின்றனர். பழநி கோயிலின் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான நிலத்தை யாருக்கும்பதிவுசெய்யக் கூடாது என கோயில் இணை ஆணையர் மூலம் பதிவுத்துறைக்கு பலமுறை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 27-ல் அந்த நிலத்தை பதிவு செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தை பதிவு செய்ய முடியாது எனக்கூறி, ஏப்.1-ம் தேதி விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலத்தை பதிவுசெய்ய முயன்றவர்கள் அந்த கடிதத்தை வைத்து நீதிமன்றம் சென்றுள்ளனர்.

ஆவணங்கள் சரிவர இருந்தால் நிலத்தை பதிவு செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அந்த தீர்ப்பை வைத்து ஜூலை 3-ம் தேதி நிலத்தை பதிவுசெய்ய முயற்சிக்கின்றனர். அதற்கு ஒருநாள் முன்பு ஜூலை 2-ம் தேதியே பழனி கோயில் இணை ஆணையர் அந்த நிலத்தை தனியாருக்கு பதிவுசெய்யக்கூடாது என்று மாவட்ட பதிவாளருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். சார் பதிவாளர் பணியில் இருந்தவர் விடுப்பில் சென்றதால் ஜூலை 6-ம் தேதி கூடுதல் பொறுப்பாக ஜஸ்டின் மணிகண்டன் சார்பதிவாளர் பொறுப்புக்கு வருகிறார். அவருக்கு அந்த நிலம் குறித்த தகவல் சரிவர தெரியாததால் அதை ஜூலை 6-ம் தேதி பதிவுசெய்து கொடுத்துவிடுகிறார். இந்த தகவல் தெரிந்தவுடன் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை, பதிவுத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசு மீண்டும் அந்த இடத்தை கைப்பற்றும்.

நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் மீது எப்படியாவது ஊழல் கறை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. நிலத்தை வாங்கியவர் , பதிவு செய்த சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அதே போல், அந்த நிலத்தை வாங்கியவர் எனது உறவினர் எனவும் தகவல் பரப்பப்படுகிறது. இதுமுழுவதும் தவறான தகவலாகும். பொய் பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். கோயில் நிலங்களை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் தர நாங்கள் தயாரில்லை. அதேபோல், கரூரில் கோயில் நிலம் தாரை வார்க்கப்பட்டதாக கூறுவதும் தவறு. 1963-67 இனாம் ஒழிப்பு சட்டத்தின்படி பட்டா பெற்று, 60 ஆண்டுகளாக வசிக்கும் மக்களின் நிலங்களை விற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மட்டுமே அரசு தற்போது நீக்கியுள்ளது. அங்கு யாருக்கும் புதிதாக பட்டா வழங்கவில்லை.

கோயில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது . ஆனால், அரசு பட்டா வழங்கியும் கரூரில் நிலத்தை விற்க முடியாவிட்டால் அந்த மக்களுக்கு ஆதரவு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ் செல்வன் கூறும்போது, ‘‘பழநி கோயில் நிலம் விவகாரத்தில் தவறு நடைபெற்றுள்ளது. சார்பதிவாளர் தவறு செய்ததால் தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே பதிவு செய்ததாக சார்பதிவாளர் கூறினார். அந்த பதிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,முதல்வர் அனுமதிபெற்று தேவையெனில் உயர்மட்ட விசாரணை நடத்தப் படும்’’என்றார்.


Hindu Tamil 1 day ago
Home Flash News