20 பாஜக கவுன்சிலர்கள் பதவியேற்பு செல்லாது! உயர் நீதிமன்றம் அதிரடி
திருவனந்தபுரம் மாநகராட்சியில் விருப்ப தெய்வங்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களைக் கூறி பதவியேற்ற 20 கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறைந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டியின் பெயரைக் குறிப்பிட்டு பதவியேற்ற வடக்கஞ்சேரி கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர் சுனில் சுவட்டுப்பாடத்தின் பதவியேற்பும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, கடந்த 2025 டிசம்பர் 21 அன்று திருவனந்தபுரம் மாநகராட்சியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொண்ட பாஜக கவுன்சிலர்கள், குருதேவா, பாரதமாதா, ஆற்றுக்கால் அம்மன், ஸ்ரீ பத்மநாப சுவாமி, ஐயப்பன் போன்ற பல்வேறு ஹிந்து தெய்வங்களின் பெயர்களையும், தங்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், நகராட்சிச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராக விருப்ப தெய்வங்களின் பெயர்களாலும் அரசியல் தலைவர்களின் பெயர்களாலும் பதவியேற்ற 20 பாஜக கவுன்சிலர்களின் பதவியேற்பை செல்லாததாக அறிவிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலரும் அக்கட்சியின் தலைவருமான எஸ்.பி. தீபக் மனுத் தாக்கல் செய்தார்.
இதேபோல், மறைந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி பெயரைக் குறிப்பிட்டு வடக்கஞ்சேரி பஞ்சாயத்தில் பதவியேற்ற சுனிலுக்கு எதிராக கண்ணன் என்பவர் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். இவ்விரண்டு மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன், அவர்களின் பதவியேற்பு செல்லாது என்று இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். "கேரள நகராட்சிச் சட்டம், 1994-இன் கீழ் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கடவுள் எனக் கூறியோ அல்லது உறுதிமொழி ஏற்பதன் மூலமோ மட்ட்மே பதவிப் பிரமாணத்தை மேற்கொள்ள வேண்டும்.
கடவுள் என பொதுவாக குறிப்பிட்டு பதவியேற்கலாம். ஆனால், விருப்ப தெய்வங்களின் பெயரைக் கூறி பதவியேற்க முடியாது. ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், பதவிப் பிரமாணம் ஏற்பது என்பது, தான் நேர்மையாக இருப்பேன், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுவேன், மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று வாக்காளர்களுக்கு உறுதியளிப்பதாகும். எனவே, அவர் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளும்போது, அது தொடர்புடைய சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர்.
மேலும், அடுத்த 4 வாரங்களுக்குள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.