கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை; கேரள அரசு அதிரடி
கேரள மாநிலத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், முன்னதாக அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவிகளுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளை உயர்கல்வித் துறை ரோஜி எம்.ஜான் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய 5 அறிக்கைகளில் ஒன்று இந்த திட்டம் ஆகும். எனவே, மாணவிகளுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ கேரளப் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் தலையீடு குறித்து மாநில அரசு மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கேரளத்தில் உயர்கல்வி துறையைக் காவிமயமாக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு இடமளிக்காது” என்று தெரிவித்தார். கேரள அமைச்சர் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, கல்லூரி மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தமிழகத்தில், கல்லூரி மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.