5,000 பள்ளிகளில் விரைவில் ஏஐ கோடிங், பைத்தான் பயிற்சி: பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
சென்னை: விரைவில் 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ கோடிங், பைத்தான், விர்ச்சுவல் ரியாலிட்டி, எச்டிஎம்எல் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு நடந்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
துறைச் செயலர் சந்திரமோகன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் எஸ்.ஜெயந்தி, அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் - செயலர் இரா.சுதன், துறை இயக்குநர்கள் எஸ்.கண்ணப்பன் (பள்ளிக்கல்வி), பி.ஏ.நரேஷ் (தொடக்கக் கல்வி), சசிகலா (அரசுத் தேர்வுகள்), சுகன்யா (தனியார் பள்ளிகள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன், உறுப்பினர் எம்.பழனிசாமி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:
தேர்ச்சியில் சாதனை
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.3 சதவீதம் பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய சாதனைதான்.
ஆனால், இந்த தேர்ச்சி போதாது. தேர்ச்சியில் விடுபட்டவர்கள், சக மாணவர்களின் வேகத்துக்கு வராதவர்கள், அதாவது என்னைப் போல மெதுவாக கற்பவர்களும் தேர்ச்சி வட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வெறும் கூட்டல், கழித்தல், பாடங்கள் மனப்பாடம் என்று இருந்த தலைமுறையை மாற்றி, 5 ஆயிரம் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கோடிங், பைத்தான், விர்ச்சுவல் ரியாலிட்டி, எச்டிஎம்எல் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
பின்னர், தமிழகம் முழுவதும் இப்பயிற்சி விரிவுபடுத்தப்படும். முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போது அவர்களது மனநலன்மேம்படும். போதைப் பழக்கம் போன்ற தவறான பாதைகளுக்கு செல்ல மாட்டார்கள். அதேபோல, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வகுப்பறை முதல் கழிப்பறை வரை அனைத்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.