Select Location
All Locations
State
Region
City / District
மீனாட்சி நடராஜன் விவகாரத்தில் தேர்தல் அதிகாரியின் முடிவு சட்டப்படி தவறானது: காங்கிரஸ்

மீனாட்சி நடராஜன் விவகாரத்தில் தேர்தல் அதிகாரியின் முடிவு சட்டப்படி தவறானது: காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மீனாட்சி நடராஜனின் மனுவை நிராகரித்தது சட்டப்படி தவறு என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது. மாநிலங்​களவை​யில் காலி​யாக உள்ள 27 இடங்​களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் மத்திய பிரதேசத்​தில் 3 இடங்​களுக்கு தேர்​தல் நடை​பெறுகிறது. 230 உறுப்​பினர்​ கொண்ட மாநில ​பேர​வை​யில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 58 வாக்​கு​கள் தேவை. பாஜகவிடம் 164, காங்​கிரஸிடம் 64 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். இதனால் பாஜக 2 இடங்களிலும், காங்​கிரஸ் ஓரிடத்திலும் எளி​தாக வெல்ல முடி​யும். பாஜக பொதுச் ​செய​லா​ளர் தருண் சக், மாநிலசெய​லா​ளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாள​ர்களாக உள்​ளனர். பாஜக​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் 3-வது வேட்​பாள​ராக மகேஷ் கெவத் அறிவிக்​கப்​பட்டார். காங்​கிரஸ் சார்​பில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஹைத​ரா​பாத் நீதி​மன்​றத்​தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி குறிப்பிடப்படாததால் அவரது வேட்​பு மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, பாஜக​வின் 3 வேட்​பாளர்​களும் போட்​டி​யின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களிடம் காங்கிரஸ் சார்பில் முறையிடப்பட்டது. காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அபிஷேக் மனு சிங்வி, விவேக் தங்கா, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெயராம் ரமேஷ், பூபேஷ் பெகல், தீபா தாஸ்முன்ஷி, மீனாட்சி நடராஜன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் மனு சிங்வி, “நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் விரிவான விளக்கத்தை அளித்தோம். தேர்தல் நடத்தும் அதிகாரி (ஆர்ஓ) தவறான, நியாயமற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் எடுத்துரைத்தோம். தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 33ஏ-ன்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் முறையாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகியவற்றில் மட்டுமே தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மீனாட்சி நடராஜன் விவகாரத்தில், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது என்பதற்கு விளக்கம் கோரி மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அந்த விவகாரம், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், சட்டப்படி அவர் மீது எந்த ஒரு குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை என்றே அர்த்தம். ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டை முன்வைப்பதாலேயே அது குற்றவியல் வழக்காக ஆகிவிடாது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையே இன்னும் வராத நிலையில் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை அவர்கள் நிராகரித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். வேட்புமனுவை திரும்பப் பெறும் நாளான இன்று நாங்கள் எங்கள் கோரிக்கையை வைத்துள்ளோம். போதுமான நேரம் உள்ளது. மீனாட்சி நடராஜனுக்கு எதிரான உத்தரவு என்பது சட்ட அடிப்படை அற்ற, சட்டவிரோதமான உத்தரவு. இது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்” என தெரிவித்தார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News