எளிமையும் தரமும் சம அளவில் - யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு
அனைத்திந்தியப் போட்டித் தேர்வுகளில், யு.பி.எஸ்.சி. குடிமைப்பணித் தேர்வுக்கு எப்போதுமே ஒரு தனியிடம் உண்டு. தேர்வுகள் நடத்தப்படும் விதம், வினாக்களின் தரம், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் குறிப்பிட்ட காலத்தில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணி வழங்குவதில் தொழில்முறை நிபுணத்துவம்... மிகுந்த பாராட்டுக்கு உரியது. இவ்வாண்டும் இந்த சிறப்பைத் தேர்வாணையம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. யு.பி.எஸ்.சி.க்கு நமது வாழ்த்துகள். பொதுப் பாடப் பிரிவில் கேள்விகள் - எளிமையும் கடினமும் கலந்து, புதுமையும் தரமும் இணைந்து காணப்படுகின்றன. வழக்கமான பாடங்கள், பழக்கப்பட்ட பகுதிகள்; ஆனாலும் கேள்விகள், சற்றே மாறுபட்டு, பிறிறொரு கோணத்தில், சிந்திக்க வைக்கின்றன; திகைக்க வைக்கின்றன. தேர்வர்கள் பலருக்கு இந்தத் தேர்வு, சற்று புதிய அனுபவத்தை தந்திருக்கக் கூடும். ‘தெரிந்தாற் போல இருக்கிறது.. ஆனால் தெரியவில்லை’! தான் படித்து ‘உணர்ந்ததை’ விடையாகத் தரவேண்டிய கேள்விகள், கணிசமாக இருக்கின்றன. இப்படி விளிக்கலாம்: ‘மரபு மீறாத புதுமை’.
தொன்மை, சமயம், கலை, பண்பாடு சார்ந்த வினாக்கள் ‘அறிந்தும் அறியா’ வகை! வேதகால ஆறுகள், புத்த மதக் காலி இருக்கை, சமணத்தில் வாழ்க்கைப் படிவங்கள், கோயில் கட்டமைப்புகள், அமராவதி ஸ்தூபி சிற்பங்கள், ‘சேத்ர பத்னி’ ‘பாக்’ குகைகள்... சிலருக்கு வியப்பும் சிலருக்குக் குழப்பமும் தந்து இருக்கலாம். மல்லிகார்ஜுன மன்சூர் பாடல்கள், ‘ராக பில்வால்’ இந்துஸ்தானி ராகத்துக்கு இணையான கர்நாடக சங்கீத ராகம்... ‘வாய்ப்பில்லை’ ரகம். விடுதலைப் போராட்ட வரலாறு - எளிய கேள்விகளால் நிரம்பி இருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய ஃபார்வர்டு பிளாக், ‘அவாதி’யில் வெள்ளையர் ஆட்சியின் நிலைப்பாடு, பர்தோலி சத்தியாகிரகம், மான்டெக் செம்ஸ்போர்ட் சீர்திருத்தம்... தேர்வர்கள் அள்ளி இருக்கலாம்.
புவியியல் சுற்றுச்சூழல் சார்ந்த பகுதி ஒரு ‘கலவை’. நன்கு தயார் செய்து போகிற பழக்கப்பட்ட தேர்வர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். உலகத் தொன்மை இடங்கள், எரிமலை, தேசியப் பூங்கா, ஐநா பெருங்கடல் மாநாடு, மாங்குரோவ் சுற்றுச்சூழல் அமைப்புகள், விழிஞ்ஞம் சர்வதேசக் கடல் மையம், ‘சாகர்மாலா’ திட்டம், கார்பன் வெளியேற்றக் குறைப்பு திட்டங்கள், பருவநிலை மாற்றத்துக்கு இந்தியாவின் எதிர் நடவடிக்கை... அநேகமாக எல்லாம் எதிர்பார்த்ததுதான். மூன்று நாடுகள் வழியே பாயும் ஆறு, ‘நிரந்தர்’, ‘கிப்பன்ஸ்’ ஆகியன சற்றே ஆச்சரியமாய் இருந்திருக்கலாம். உ.பி. ராஜஸ்தான், சிக்கிம் மாநில எல்லைகள், சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பொருத்துதல், நாகாலாந்து டோயாங் ஏரி, உலகளாவிய நெசவுத் தொழில்.. சிந்திக்க வைத்திருக்கக் கூடும்.
சர்வதேசக் காவல் அமைப்பு ‘இன்டர்போல்’ அனுப்பும் நோட்டீஸ் வகைகள், ஜெர்மனி அதிபரின் இந்திய வருகைக்கான நோக்கம், அண்டை நாடுகளை இணைக்கும் ஆற்றுப் பாலங்கள், ‘ஜீரோ’ முதல் தகவல் அறிக்கை, டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ‘வைல்ட் கார்ட்’.. சுவாரசியம் நிறைந்தவை. எத்தனை பேர் ‘அனுபவித்து’ இருப்பார்கள்..? தெரியவில்லை. பாதுகாப்புத் துறையில் சில கேள்விகள் - ‘பார்த்திருந்தால்’ பதில் சொல்லலாம். ஆழ்கடல் இயக்கம், தேசிய குவாண்டம் இயக்கம், சுதர்சன் சக்ரா இயக்கம், ‘ஸ்டீல்த்’ தொழில்நுட்பம், ‘குழு முதலீடு’, டிஜிட்டல் கரன்சி, ‘கருப்பு சங்கிலி’, பசுமைப் பத்திரம், பாரத் வானிலை முன்னெச்சரிக்கை அமைப்பு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ‘ஆசியன்’ தொடர்புத் திட்டங்கள், ‘பூங்’ திரைப்படம், ‘துருவ் 64’, ஹார்முஸ் நீரிணை வழியே கப்பல்களை அனுப்ப வேண்டியுள்ள நாடுகள்... இளம் தேர்வர்களுக்கு, முழுமையான பொது அறிவு விருந்து! இந்திய சாசனத்தில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கேள்விகள் உள்ளன. ஆனாலும் ஒரு நிறைவு. அநேகமாக இதுவரை போட்டித் தேர்வுகளில் அதிகம் இடம் பெறாத, சாசனத்தின் நிறைவுப் பகுதியான பாகம் XXII - பிரிவுகள் 393 - 395ஐ உள்ளடக்கிய கேள்விக்கு... சபாஷ்! மொத்தத்தில், தேர்ச்சி பெறுவோர் அல்லாதோர் அனைவருக்கும் இத்தேர்வு - ஓர் இனிய அனுபவம். தேர்வர்களுக்கு நல்வாழ்த்துகள்!