தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
டெஹ்ரான்: தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என அமெரிக்காவுக்கு, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார்.
ஈரான்- அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், 2-வது கட்ட பேச்சுவார்த்தை தாமதமாகி வருகிறது. இந்நிலையில், ஈரான் அதிபர் அலுவலக தகவல் தொடர்பு அதிகாரி சையத் மெஹ்தி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா கீழ்த்தரமான விளையாட்டுகளில் ஈடுபடுகிறது. குழந்தைகளை கொன்ற அதிபர் ட்ரம்ப் தோண்டிய குழியில் சிக்கிய அமெரிக்க அதிகாரிகள் தப்பிச் செல்ல வேண்டும். ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்கிவிட்டு தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும். ஈரான் அமைதியையும், நட்பையும் விரும்பும் நாடு. எங்களிடம் யாராவது அச்சுறுத்தல் மொழியில் பேசினால், அவர்களுக்கு பலத்த அடி கிடைக்கும். இவ்வாறு சையத் மெஹ்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.