"மம்தாவை தோற்கடிக்க பாஜகவுடன் ரூ.1000 கோடி டீல்.." ஹுமாயுன் கபீர் வீடியோ வைரல் - கூட்டணியை முறித்த ஓவைசி
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசியலில் முக்கிய புள்ளியான ஹுமாயூன் கபீர் கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து ஆம் ஜனதா உன்னயன் கட்சி (AJUP) என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அசாதுதீன் ஒவைசி உடைய ஏஐஎம்ஐஎம் கட்சயுடன் ஏயுஜேயுபி கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், ஹுமாயூன் கபீர் தொடர்புடைய வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டது. அந்த வீடியோவில், ஹுமாயூன் கபீர் பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. அதில், தான் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், சுவேந்து அதிகாரி (மேற்கு வங்க பாஜக தலைவர் மற்றும் எதிரிகட்சித் தலைவர்) மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா (அசாம் முதல்வர்) போன்ற பாஜக தலைவர்களுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறுவது போல் இடம்பெற்றுள்ளது.
மேலும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பாஜகவிடம் ரூ. 1,000 கோடி திட்டம் உள்ளதாகவும், அதில் ரூ. 200 கோடி முன்பணமாகப் பெறப்பட்டதாகவும் அவர் கூறுவது போல அதில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவில், முஸ்லிம்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்றும், அவர்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பாஜகவிற்கு உதவலாம் என்றும் அவர் பேசுவது போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள ஹுமாயூன் கபீர், அந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று கூறியுள்ளார்.
தான் 2019க்குப் பிறகு எந்த பாஜக தலைவரையும் சந்திக்கவில்லை என்றும், தன் மீது அரசியல் ரீதியாகப் பழிவாங்க மம்தா பானர்ஜி மேற்கொண்ட சதி இது என்றும் அவர் சாடியுள்ளார். இதற்கிடையில் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஹுமாயுன் கபீர் கட்சியுடன் இருந்த கூட்டணியை அசாதுதீனின் ஏஐஎம்ஐஎம் முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் கருத்துக்களைக் கொண்டவர்களுடன் எங்களால் கைகோர்க்க முடியாது. வங்காள முஸ்லிம்கள் மிகவும் ஏழ்மையான மற்றும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ஒரு சுதந்திரமான அரசியல் குரல் தேவை.எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வித கூட்டணியும் இன்றி ஏஐஎம்ஐஎம் தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்று ஒரு மசூதியைக் கட்டுவேன் என்று உறுதியளித்து சர்ச்சையில் சிக்கியவர் இந்த ஹுமாயுன் கபீர் என்பது குறிப்பிடத்தக்கது.