வர்த்தக எல்பிஜி விநியோகம் 70% அளவுக்கு மீண்டதாக மத்திய அரசு தகவல்
புதுடெல்லி: வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் விநியோகம் 70% அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா, “புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்பிஜி தேவையில் கிட்டத்தட்ட 60% இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது
இதைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு எல்பிஜி விநியோகஸ்தரிடமும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நேற்று மட்டும் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எங்களின் ஆன்லைன் முன்பதிவு 98%-ஐ எட்டியுள்ளது. மேலும், ஓடிபி அடிப்படையிலான எல்பிஜி விநியோகம் 92%-ஐ எட்டியுள்ளது. வர்த்தக எல்பிஜியில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அது சுமார் 70% அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மருந்து, உணவு, பாலிமர்கள், விவசாயம், பேக்கேஜிங், பெயிண்ட்ஸ் போன்ற துறைகளுக்கான மொத்த வீட்டு உபயோகம் அல்லாத எல்பிஜி விநியோகமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.