ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு
புதுடெல்லி: ஈரான் மீதான தாக்குதலுக்குப்பின் 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படை மற்றும் ஈரான் இடையிலான பேராரால், 95 நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு கேலன் (3.8 லிட்டர்) பெட்ரோல் விலை ரூ.2.94 டாலரில் இருந்து 3.58 டாலராக உயர்ந்துள்ளது. இது 20 சதவீத உயர்வாகும். அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் தங்கள் இஷ்டத்துக்கு பெட்ரோல் விலைகளை உயர்த்தியுள்ளன. பல மாநிலங்களில் ஒரு கேலன் பெட்ரோல் 4 டாலரை தாண்டிவிட்டது. கலிபோர்னியாவில் ஒரு கேலன் 5 டாலரை தாண்டிவிட்டது. இது கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமான விலை உயர்வாகும். சில நாடுகள் மாத இறுதியில்தான் எரிபொருள் விலை மாற்றத்தை அறிவிக்கும்.
அதனால் அடுத்த மாதம் முதல் பல நாடுகளில் பெட்ரோல் விலை அதிகரிக்கும். கம்போடியாவில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 68 சதவீதம் உயர்ந்துள்ளது. வியட்நாமில் 50 சதவீதம், நைஜீரியாவில் 35 சதவீதம், லாவோஸில் 33 சதவீதம், கனடாவில் 29 சதவீதம் பெட்ரோலிய எரிபொருள் விலை உயர்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வரப்படும் பெட்ரோலிய எரிபொருட்களை ஆசிய நாடுகள் அதிகம் சார்ந்துள்ளன. கிழக்கு ஆசியாவில் உள்ள ஜப்பான் 95 சதவீத எரிபொருளையும், தென் கொரியா 70 சதவீத எரிபொருளையும் ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. அதனால் இவை அவசரகால நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. தென் கொரியா கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல், டீசலுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் பாதிப்பு இன்னும் மோசமாக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் எரிபொருள் சேமிப்பு வசதி குறைவாக உள்ளது. இதனால், வங்கதேச அரசு பல்கலைக்கழகங்களை மூட உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் அரசு அலுவலகங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எரிபொருளை சேமிக்க 50 சதவீத பணிகள் வீட்டிலிருந்தே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு குறித்து ஆலோசிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஜி 7 நிதியமைச்சர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. அவசர கால எரிபொருள் சேமிப்பிலிருந்து 20 முதல் 30 சதவீதம் எரிபொருட்களை விடுவிக்கும் ஆலோசனையை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலை எல்லாம் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது.