இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்: 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம்
நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ள நிலையில், 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் ராமேஸ்வரம் தீவு மீனவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி ராமேஸ்வரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும், டிச.26ம் தேதி ராமேஸ்வரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.