South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

சென்னை: மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில், எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, வழக்கை எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும், ஐஜி கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 22க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி நவம்பர் 11ம் தேதி டிஜிபியிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றம் நடந்ததாக நான் கூறவில்லை. எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தான் கோருகிறேன். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் எவ்வித வெளிப்புற அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, பெண் மாவட்ட கலெக்டரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல், பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும். எனவே, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டு பத்திரிகை தகவல்கள், சமூக வலைத்தள பதிவுகள் மட்டுமே. முறையான ஆவணம் இருந்தால் தாருங்கள் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயக்குமாரிடம் கேட்டார்.

இதை தொடர்ந்து தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சம்மந்தப்பட்ட கலெக்டரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாவட்ட கலெக்டர் ஏன் புகார் கூறவில்லை. ஒரு எம்எல்ஏவின் மாண்பை குலைத்துவிடும். புகார் எதுவும் இல்லையென்றால் நீதிமன்றம் இதில் தலையிடாது. இந்த பிரச்னையில், கலெக்டர் புகார் கொடுத்தாரா என்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட கலெக்டரிடம் விசாரித்து தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். முதல் வழக்காக இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி லட்சுமி நாராயணன், குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியனிடம் எஸ்.பியிடம் பேசினீர்களா என்று கேட்டார். உடனே, எஸ்.பியின் அறிக்கையை அரசு குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். பின்னர் புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. அதை ஏன் இணையத்தில் பதிவேற்றவில்லை என்றார். அதற்கு ஜான் சத்தியன் வெளியே கசிந்துவிடும் என்றார். இதைத்தொடர்ந்து, எப்ஐஆரை படித்து பார்த்த நீதிபதி, பொது தளத்தில் இதுபோன்ற ஆபாச தகவல் பரவுவதை ஏன் நீங்கள் ஏன் தடுக்கவில்லை?. பேஸ் புக், டுவிட்டரில் பரவி வருகிறது. இந்த பிரச்னை குறித்து மாநில அளவில் ஒரு குழு அமைத்து ஏன் விசாரிக்கவில்லை.

தலைமை செயலாளராக இருந்தாலும் தூய்மை பணியாளராக இருந்தாலும் சரி அதற்கும் கீழ்நிலை பணியாளர்களாக இருந்தாலும் அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை வந்தால் அவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு என்ன செய்ய போகிறது. ஐஜி தலைமையில் ஒரு குழு அமைத்து இந்த வழக்கை கண்காணிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பரவுவதை தடுக்க வேண்டும். யாரையும் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கும் குழுவை ஏன் அமைக்கவில்லை. நேற்றுதான் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். ஜூலை 31ம் தேதியே இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த விஷயம் வெளிவரவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும். விசாரணையை ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி கண்காணிக்க வேண்டும். பத்திரிகை, ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் இந்த விவகாரம் தொடர்பாக செய்திகளை வெளியிடக்கூடாது. டிசம்பர் 22ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார். மேலும் கடந்த ஜூலை 31ம் தேதியே பெண் கலெக்டர் புகார் செய்ததாகவும், பெண்ணை பணியிடத்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

📍 Tamilnadu
📰 Dinakaran Tamil
🕒 1 hr ago

Related News

‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
இருவேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது செல்லாது: ஐகோர்ட்
இருவேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது செல்லாது: ஐகோர்ட்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡