காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடத்தப்பட்ட மாபெரும் அறிவியல் கண்காட்சியில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் (தன்னாட்சி) மற்றும் திருப்பூரில் செயல்படும் கல்விக் குழுமமும் இணைந்து தேசிய அளவில் மாபெரும் அறிவியல் கண்காட்சியை 2 நாட்கள் நடத்தியது.
இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்விக் குழுமத்தின் தலைவர் மணி பசுபதிரெட்டி வழிகாட்டுதலில், துணை தலைவர் மருத்துவர் கனிஷ்கா ரெட்டி, தலைமை செயல் அலுவலர் யோகானந்த் ஆகியோர் தலைமை தாங்கி, மாபெரும் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
கல்விக் குழுமத்தின் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் சுரேஷ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி ஆகியோரின் மேற்பார்வையில் கண்காட்சி நடைபெற்றது. மாபெரும் அறிவியல் கண்காட்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,300 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன.
இக்கண்காட்சியல் புதிய செயற்கைக்கோள் கருவி, தானியங்கி மூலம் செயல்படும் இயந்திரங்கள், வேளாண்மை, பொறியியல், மருத்துவம், அவசரகால நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளில் இருந்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படும் வகையில் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் இன்றும் எதிர்காலத்திற்கும் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்தன. மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பல்வேறு துறைச்சார்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் கண்டு வியப்படைந்தனர்.
இம்மாபெரும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற கண்டுபிடிப்புகளை சுமார் 10க்கும் மேற்பட்ட துறைச்சார் நடுவர்கள் கலந்துக்கொண்டு, சிறந்த கண்டுபிடிப்புகளை தேர்வு செய்தனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம் மற்றும் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.