காசி தமிழ் சங்கமம் 5.0 – நவம்பர் 25 முதல் 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை: காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி (பனாரஸ்) நகருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 14 சிறப்பு ரயில் சேவைகளை ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்பு ரயில்கள் நவம்பர் 25 முதல் டிசம்பர் 15, 2026 வரை இயக்கப்பட உள்ளன. மொத்தம் 7 ஜோடி சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரி, சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து பனாரஸுக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எந்தெந்த நகரங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படும்?
கன்னியாகுமரி: நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் புறப்படும்.
சென்னை சென்ட்ரல்: நவம்பர் 28, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் ரயில்கள் இயக்கப்படும்.
கோயம்புத்தூர்: நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் புறப்படும்.
முக்கிய ரயில் விவரங்கள்
ரயில் எண் 06041 – கன்னியாகுமரி முதல் பனாரஸ் வரை.
ரயில் எண் 06043 – சென்னை சென்ட்ரல் முதல் பனாரஸ் வரை.
ரயில் எண் 06047 – கோயம்புத்தூர் முதல் பனாரஸ் வரை.
முக்கிய நிறுத்தங்கள்
இந்தச் சிறப்பு ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், மஞ்சேரியல், சிர்பூர் காகஜ்நகர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
காசி தமிழ் சங்கமம் 5.0 எப்போது?
ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருளாக 'திருக்குறள் பயில்வோம் – Thirukkural Abhyas Karen' அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான தொன்மையான கலாச்சார, பண்பாட்டு உறவுகளைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்திலிருந்து சுமார் 1,400 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சிறப்பு ரயில் சேவைகள் மூலம் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்பும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும்.