கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள்: அமைச்சர் ரமேஷ் தகவல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று 8,000 பேருக்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.தீபத்திருவிழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அறநிலையத்தறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் வந்தனா கார்க், அறநிலையத்துறை ஆணையர் வினய், எஸ்பி உதயகுமார், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், எம்எல்ஏ அபிஷேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
பின்னர், அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:
தீபத் திருவிழாவுக்கு 80 சதவீத முன்னேற்பாடுகள் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் வரும் 21ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும். இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா தீபத்தன்று சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு முதன்முறையாக, பரணி தீபம், மகா தீபத்திற்கு கட்டணமின்றி 3 ஆயிரம் பக்தர்களை ஆன்லைன் பதிவு மூலம் அனுமதிக்க இருக்கிறோம். அதற்கான, பதிவு தொடங்கியதும் சர்வர் பிரச்னை இருந்தது. உடனடியாக சரி செய்யப்பட்டது. உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் பயன்பெறுவார்கள். மேலும், முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், நீதித்துறையினர், அரசியல் கட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் ஆகியோருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளன.
கோயிலுக்குள் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இந்தமுறை சில மாற்றங்களை செய்திருக்கிறோம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கோயிலில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரிவலப் பாதையில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிற்கு பக்தர்களை பாதுகாக்கும் வகையில் மருத்துவ முகாம்கள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையேறுவதில் உள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போல இந்தமுறையும் பக்தர்களுக்கு தடை நீடிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.