ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் சைவ சமய ஆகம விதிகளுக்கு எதிராக தனிநபர் தங்கும் விடுதி கட்ட பக்தர்கள் எதிர்ப்பு
பொன்னேரி, நவ.12: பொன்னேரியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் சைவ சமய ஆகம விதிகளுக்கு எதிராக தனி நபர்கள் தங்குவதற்கு கட்டிடம் கட்ட பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நடந்து வரும் இந்த கட்டுமான பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பொன்னேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலானது புராணத்துடன் தொடர்புடையதாகும். பார்வதி தேவி சிவபெருமானால் ஏற்பட்ட சாபம் விலக 11 அமாவாசைகள் இங்குள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக ஐதீகம்.
தற்போதும் இங்கு அமாவாசை அன்று பார்வதி தேவி வழிபட்டமையின் காரணமாக சிவசக்தி பூஜை நடைபெற்று வருகிறது. மேலும், சைவம் பெரிதா வைணவம் பெரிதா என்ற தர்க்கம் அகத்திய மாமுனிக்கும்-பரத்வாஜ் மகரிஷிக்கும் ஏற்பட்டபோது அரியும் சிவனும் ஒன்று என்பதை இருவருக்கும் உணர்த்தும் வகையில் மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் ஒன்றாக காட்சி தந்து இத்தளத்தில் அருளியதால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்கு சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு உற்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 23ம், தேதி இதன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் எந்த புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ள கூடாது என்ற ஆகம விதிகள் உள்ள நிலையில், தனிநபரோ அல்லது அரசு புராதான கோயில்களின் தொன்மை பாதிக்கும் வகையில் அதன் கட்டமைப்பை மாற்றுவதோ அல்லது புதிதாக வேறு கட்டிடங்களோ கட்டக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தியும் சைவ சமய ஆகம விதிகளுக்கு எதிராக அறங்காவலர் குழுவினர், தன்னிச்சையாக தனி நபர்கள் தங்குவதற்காக கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு முரணாக நடைபெறும் இந்த கட்டுமான பணியினை தடுக்க வேண்டிய எச்ஆர்என்சி செயல் அலுவலர் தனி நபர்களின் அத்துமீறர்களுக்கு துணை போவதாக குற்றம் சாட்டியுள்ள பக்தர்கள் கோயில் திருப்பணியை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாதிகளின் ஆலோசனைகளை பெறாமலும், தொல்லியல் துறையினரின் தடையில்லா சான்று, பண்பாட்டுத் துறையினரின் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை பெற வேண்டும் என்ற விதிமுறைகளை கூட பின்பற்றாமல் தனி நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொதுமக்கள் வழங்கிய நன்கொடைகளை விரையம் செய்து தேவையற்ற கட்டிடங்கள் கோயில் வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ளது. புனரமைப்பு பணியின்போது ஏற்கனவே சேதம் அடைந்திருந்த வாகன கிடங்கு அகற்றப்பட்ட நிலையில் புதிதாக வாகன கிடங்கு கூட கட்டாமல் வாகனங்கள் திறந்தவெளியில் கோயிலுக்கு முன்பு உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அவை மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி நடைபெறும் இந்த சைவ சமய ஆகம விதிகளுக்கு எதிரான கட்டிட கட்டுமான பணியினை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், துறை சார்ந்த அமைச்சருக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் தனித்தனியாக புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே பொன்னேரி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் சைவ சமய ஆகம விதிகளுக்கு எதிராக தனி நபர்கள் தங்குவதற்காக கட்டப்படும் கட்டிட கட்டுமான பணியினை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பல்வேறு இந்து அமைப்புகள் அறிவித்து உள்ளனர்.