15 நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்த பழனி ரோப் கார் சேவை!!
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை, 15 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் மலையின் மீது அமைந்துள்ளது. இதனால் அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல படித்துறை மற்றும் யானைப் பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர, பக்தர்கள் மலைக்கோயிலுக்கு எளிதில் சென்றுவர ரோப் கார் மற்றும் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் பயன்பாட்டில் உள்ளன.
இதில் ரோப் கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், இந்த ரோப் கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த ஆன்மிக மற்றும் சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. இதனிடையே, மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 20ஆம் தேதி முதல் பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதுகள் சரிபார்க்கப்பட்டு, முழுமையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பழனி ரோப் கார் சேவை 15 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.