Select Location
All Locations
State
Region
City / District
நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே: 89 ரன்களில் குஜராத் வெற்றி

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே: 89 ரன்களில் குஜராத் வெற்றி

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. குஜராத் டைட்டன்ஸ் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ரன்களில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே. வியாழக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச முடிவு செய்தார். குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷுப்மன் கில், 37 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்துக்கு வந்த பட்லர் உடன் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சாய் சுதர்ஷன்.

53 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து சாய் சுதர்ஷன் வெளியேறினார். ராகுல் தெவாட்டியா 0, வாஷிங்டன் சுந்தர் 7 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. ஜாஸ் பட்லர், 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 230 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். பவர்பிளே முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. ருதுராஜ் கெய்க்வாட் 16, உர்வில் படேல் 0, மேத்யூ ஷார்ட் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்ஸில் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் உடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக மேத்யூ ஷார்ட் விளையாடினார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் சிஎஸ்கே வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். கார்த்திக் சர்மா 19, ஷிவம் துபே 47 (17 பந்துகள்), அன்ஷுல் காம்போஜ் 19, பிரேவிஸ் 8, நூர் அகமது 1, ஸ்பென்சர் ஜான்சன் 0. 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது சிஎஸ்கே. இதன் மூலம் குஜராத் அணி 89 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறி உள்ளது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர்ந்து மூன்றாவது சீசனாக முதல் சுற்றோடு சிஎஸ்கே வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக முதல் சுற்றோடு நடையை கட்டி வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் இந்த சீசனை முழுமையாகவும், பாதியிலும் விலகினர். நேதன் எல்லிஸ், கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, தோனி உள்ளிட்ட வீரர்கள் இந்த காய பட்டியலில் அடங்குவர்.


Hindu Tamil 2 days ago
Home Flash News