சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்
சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். முதல் ஓவரின் முதல் பந்தை நித்திஷ் குமார் ரெட்டி நோ-பாலாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சஞ்சு சாம்சன். தொடர்ந்து அடுத்த பந்தை லெக் திசையில் பவுண்டரி அடித்த சஞ்சு சாம்சன் கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது.
பிரஃபுல் ஹிங்கே வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். சிறப்பாக பேட் செய்து வந்த சஞ்சு சாம்சன் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் விளாசிய நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 2.3 ஓவர்களில் 31 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய உர்வில் படேல் இதே ஓவரின் கடைசி 2 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். 4-வது ஓவரை வீசிய இஷான் மலிங்கா 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதிரடியாக விளையாட முயன்ற உர்வில் படேல் 8 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் ஹுசைன் வீசிய வேகம் (116.7 கிலோ மீட்டர்) குறைந்த ஆஃப் கட்டர் பந்தில் போல்டானார்.
இதன் பின்னர் கார்த்திக் சர்மா களமிறங்க பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 57 ரன்கள் சேர்த்தது. பிரஃபுல் ஹிங்கே வீசிய 8-வது ஓவரை கார்த்திக் சர்மா பதம் பார்த்தார். இந்த ஓவரின் முதல் பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டிய கார்த்திக் சர்மா அடுத்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து அடுத்த பந்தை விக்கெட் கீப்பரின் பின்புறம் பவுண்டரி அடித்து அசத்தினார் கார்த்திக் சர்மா. இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதையடுத்து ஷிவாங்க் குமார் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தை கார்த்திக் சர்மா சிக்ஸருக்கு விளாசினார். அதிரடியாக விளையாடிய கார்த்திக் சர்மா 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசிய நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை கவர் திசையில் விளாசிய போது நித்திஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் ஆனது.3-வது விக்கெட்டுக்கு கார்த்திக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 42 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து டெவால்ட் பிரேவிஸ் களமிறங்கினார்.
10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 91 ரன்கள் சேர்த்தது. ஷகிப் ஹுசைன் வீசிய 11-வது ஓவரில் டெவால்ட் பிரேவிஸ் ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில், 15 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் விளாசிய போது இஷான் மலிங்காவிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். நித்திஷ் குமார் ரெட்டி வீசிய 14-வது ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி விரட்ட டெவால்ட் பிரேவிஸ் தனது பங்குக்கு ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. இஷான் மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஷிவம் துபே லாங் ஆன் திசையில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.
15 ஓவர்களில் சிஎஸ்கே அணி 132 ரன்கள் எடுத்தது. பாட் கம்மின்ஸ் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட டெவால்ட் பிரேவிஸ் அடுத்த பந்தை ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். இஷான் மலிங்கா வீசிய 18-வது ஓவரின் 3-வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட டெவால்ட் பிரேவிஸ் 5-வது பந்தில் போல்டானார்.