ருத்ரபிரயாக் கிரெளஞ்ச மலை கார்த்திக் சுவாமி கோயிலில் ஸ்கந்த யாகம், 108 சங்கு பூஜை
‘தேவ பூமி’ அல்லது ‘கடவுளின் பூமி’ என்ற பெருமைக்குரிய மாநிலம் உத்தராகண்ட். இந்த மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான தலங்களுள் குறிப்பிடத்தக்கவை ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ருத்ர பிரயாக் ஆகிய புனிதத் தலங்களாகும். டேராடூன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 180 கி.மீ. தொலைவில் உள்ளது ருத்ர பிரயாக். ரிஷிகேஷ், தேவ் பிரயாக், நகர் வழியாக ருத்ர பிரயாக் செல்லலாம். பிரம்மாண்டமான மலைகளுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் பயணிப்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தைத் தருகிறது. பல இடங்களில் இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 900 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட சுரங்கப்பாதை, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது கேதார்நாத் செல்வதற்கான பயண நேரம் வெகுவாகக் குறையும் என்று கூறுகின்றனர். பல்வேறு கட்டமைப்பு பணிகளை உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.
தேவ் பிரயாக்: தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள தேவ் பிரயாக் என்பது அலக் நந்தா நதியின் ஐந்து சங்கமங்களான பஞ்ச பிரயாகங்களில் கடைசியானது ஆகும். இமய மலையில் தோன்றிய அலக்நந்தா நதியானது பல்வேறு கிளைகளாகப் பிரிந்து சென்று இறுதி சங்கமமாக தேவ் பிரயாக்கில், பாகீரதி நதியுடன் சங்கமித்து, கங்கையாக சமவெளிகளில் பாய்கிறது. இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.
சாமுண்டீஸ்வரி கோயில்: ருத்ர பிரயாக்கில் உள்ள பிரபலமான கோயில் சாமுண்டீஸ்வரி கோயில். இது பத்ரிநாத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் மந்தாகினி நதியும், கேதார்நாத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் அலக்நந்தா நதியும் இணையும் இடத்தில் உள்ளது.
கோடேஷ்வர் மகாதேவ்: ருத்ர பிரயாக் மாவட்டத்தில் அலக்நந்தா நதிக் கரையில் அமைந்துள்ள கோடேஷ்வர் மகாதேவ் கோயில் ஒரு புனிதமான குகைக் கோயிலாகும். ருத்ர பிரயாக் நகரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்த இந்த குகைக்கோயிலுக்குள் செல்லும்போது பன்னீர் தெளித்து வரவேற்பது போல் மலையில் இருந்து ஊற்று நீர் சில்லென்று நம் மீது விழும்போது மனம் சிலிர்க்கிறது. குகையின் சுவற்றில் பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன.
அவை முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ கைலாயத்தில் சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.
குகையின் உள்ளே சிவபெருமானின் லிங்க திருமேனி அருகே நாகம் குடைபிடித்து நிற்க, எதிரில் சக்தி ரூபமாக சூலாயுதம் காணப்படுகிறது. கேதார்நாத் செல்லும் வழியில் சிவபெருமான் இங்கே அமர்ந்து தியானம் செய்ததாக புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. பாறையில் இருந்து வழியும் ஊற்று நீரை செப்புக் கலசத்தில் நிரப்பி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கருணைக் கடல் கார்த்திக் சுவாமி: ருத்ர பிரயாக் - போகாரி சாலையில், கணக்செளரி கிராமத்துக்கு அருகில் ருத்ர பிரயாக் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கிரெளஞ்ச மலை. சுமார் 3,050 மீட்டர் உயரம் உள்ள மலை உச்சியில் கார்த்திக் சுவாமி வீற்றிருக்கிறார். 3 கி.மீ. தூரம் கரடுமுரடான பாதையில் பயணித்து முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும். மலைப் பாதையில் ஏற, டோலி, குதிரைகள் உள்ளன. இந்த கிரெளஞ்ச மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது கைலாய மலைத் தொடர்களான ஜானோன்லி, கங்கோத்ரி, பர்த்தே குண்டா, கேதார்நாத், சுமேரு பிரபாத், மந்தாகினி பர்வதம், சவுக்கம்பா - 4, சவுக்கம்பா - 3, பாலாகுன், நீல்கந்த் ஆகிய பனி படர்ந்த மலைச் சிகரங்களை தரிசிக்கலாம்.
கார்த்திக் சுவாமி கோயிலுக்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. இது தமிழகத்தில் கூறப்படும் கந்த புராணத்தில் இருந்து வேறுபட்டதாக உள்ளது.
கைலாயத்தில் சிவன், பார்வதி தேவி, விநாயகர், முருகப் பெருமான் ஆகியோர் வீற்றிருக்க, யார் முதன்மையானவர்? முதல் வழிபாடு யாருக்கு? என்று விநாயகப் பெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே முதல் வழிபாடு என்று சிவபெருமான் கூற, முருகப் பெருமான் உடனடியாக தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றி வர புறப்பட்டார். அதேநேரம் விநாயகப் பெருமான், தாய் தந்தையாகிய உமா மகேஸ்வரி, சிவபெருமான்தான் உலகம், அவர்களைச் சுற்றி வந்தாலே உலகத்தை சுற்றி வந்ததற்குச் சமம் என்று கூறி, இருவரையும் சுற்றி வந்து, முதல் வழிபாட்டு உரிமையை பெற்றார். முதல் வழிபாட்டு உரிமை விநாயகப் பெருமானுக்கு வழங்கப்பட்டதைக் கண்டு மனம் வருந்திய முருகப் பெருமான், கிரெளஞ்ச மலையில் எழுந்தருளினார். பின்னர் யாகம் வளர்த்து, தனது உடம்பில் இருந்து சதையை பிய்த்து எடுத்து, அதை யாகக் குண்டத்தில் ஆஹூதியாக வழங்கினார். அப்போது சிவபெருமான் காட்சி தந்து முருகப்பெருமானுக்கு அருள்பாலித்தார் என்று கூறப்படுகிறது. சதையை ஆஹூதியாக வழங்கியதால் எலும்பு ரூபமாக முருகப்பெருமான் வேல், மயிலுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவ்வாறு சுயம்பு மூர்த்தியாக முருகப்பெருமான் விளங்குவது அபூர்வமானதாகும்.