Select Location
All Locations
State
Region
City / District
பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்தித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று இரவு உடுமலை திருமூர்த்தி மலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நிலவி வந்த கடும் வெப்பம் காரணமாக, குளிர்ச்சியான சூழலைத் தேடி ஏராளமான பொதுமக்கள் திருமூர்த்தி மலைக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.

 இருப்பினும், கடந்த சில வாரங்களாக அருவியில் போதிய தண்ணீர் இல்லாததால், அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை நீடித்து வந்தது. இந்தநிலையில், நேற்று இரவு மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் வறண்டு காணப்பட்ட திருமூர்த்தி அருவிக்கு மீண்டும் உயிர் கிடைத்துள்ளது. இன்று காலை முதல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், மழையினால் பாறைகளில் வழுக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாலும் நீர்வரத்தின் வேகம் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கக்கூடும் என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குதடை விதிக்கப்பட்டுள்ளது.


Dinakaran 5 days ago
Home Flash News