புதிய அரசு பொறுப்பேற்கும் வரை முதல்வராக தொடருங்கள்.! ஸ்டாலினுக்கு அறிவுறுத்திய ஆளுநர்
Chief Minister Stalin : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு தோல்வி அடைந்த நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தநிலையில் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை முதலமைச்சராக தொடர ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இதில் திடீர் திருப்பமாக திமுக ஆட்சியை இழந்துள்ளது. அதிலும் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். அதே நேரம் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தவெகவிற்கு 108 தொகுதிகளும், அதற்கு அடுத்தபடியாக திமுகவிற்கு 73 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் கிடைத்துள்ளது. எனவே ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை, ஆனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவையாக உள்ளதால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் அறிவுறுத்தல்
எனவே தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தேவை ஏன்ற நிலை உருவாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுங்கட்சியான திமுக தோல்வியை தழுவியுள்ளது.
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக பொறுப்பு ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரை முதலமைச்சராக தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.