3வது பிரசவத்துக்கு ஓராண்டு விடுப்பு- ஐகோர்ட் அதிரடி
மூன்றாவது பிரசவத்துக்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் அரசாணையை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றிவரும் சாயி நிஷா மூன்றாவது பிரசாவத்துக்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை பேறு கால விடுப்பு வழங்க கோரி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் விண்ணப்பித்திருந்தார். மூன்றாவது மகப்பேறுக்கு 12 வாரங்கள் விடுப்பு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி, சாயி நிஷாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த மாவட்ட முதன்மை நீதிபதி, ஏப்ரல் மாதத்துக்குள் மீண்டும் பணியில் சேரும்படி கடந்த மார்ச் இறுதியில் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, 2027 பிப்ரவரி வரை தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாயி நிஷா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, மூன்றாவது பிரசவத்துக்கு முழு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி, சாயி நிஷாவுக்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து ஒரு வாரத்தில் உத்தரவு வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மூன்றாவது பிரசாவத்துக்கு 12 வாரங்களுக்கு விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், முதலாவது மற்றும் இரண்டாவது பிரசாவத்தின் போது அனுபவிக்கும் அதே வேதனையையும், வலியையும் தான், மூன்றாவது பிரசாவத்திலும் அனுபவிக்கிறார்கள் எனும்போது, எந்த பாரபட்சமும் காட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அரசின் இந்த அரசாணை மாவட்ட நீதித்துறையை கட்டுப்படுத்தாது எனவும் தெளிவுபடுத்தி உள்ளனர்.