Select Location
All Locations
State
Region
City / District
கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் அநாகரிகமாக நடப்போர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் அநாகரிகமாக நடப்போர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் பக்தர்கள் மீது காலணி வீசுவது உள்ளிட்ட அநாகரிகமாக நடந்து கொள்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரவடிவேல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

கடந்தாண்டு வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வின்போது பக்தர்கள் மீது சிலர் காலணிகளை வீசினர். இதனால் பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசல் உருவானது. இந்த காலணிகள் கள்ளழகரை விரதம் இருந்து தரிசிக்க வரும் பக்தர்களையும், கடவுள் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் மீதும் விழுகின்றன. காலணி வீசும் நபர்களால் பக்தர்கள் அவமரியாதை செய்யப்படுகின்றனர். சிலரின் செயல்பாடுகள் சித்திரை திருவிழாவுக்கு வரும் வெளிநாட்டு, வெளிமாவட்ட பக்தர்கள் மனதில் மதுரையைப் பற்றி மிகவும் தாழ்வான அபிப்ராயத்தை உருவாக்குகிறது. இவ்வாறு செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் ஏற்கெனவே நடைபெற்றது போல் காலணி வீச்சு உள்ளிட்ட அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News