போரை நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டம்
வாஷிங்டன்: அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 28-ந்தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இன்று 26-வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் இருந்து சில முன்மொழிவுகள் வந்துள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை ஈரானிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், இஸ்ரேலின் சேனல் 12 ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தான் வழியாக இந்த முன்மொழிவு ஈரானுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு அமெரிக்கா தெரிவித்த 15 அம்ச திட்டத்தில் உள்ள அம்சங்கள் வருமாறு:- ஈரான் தனது தற்போதைய அணுசக்தி திறன்களை கைவிட வேண்டும். அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபடாது என்று உறுதியளிக்க வேண்டும். ஈரானியப் பிரதேசத்தில் யுரேனியம் செறிவூட்டல் இருக்கக்கூடாது. ஈரான் தனது 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட சுமார் 450 கிலோ யுரேனியம் இருப்பை சர்வதேச அணுசக்தி முகமையிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் குறிவைக்கப்பட்ட நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் போர்டோ அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும். ஈரானுக்குள் சர்வதேச அணுசக்தி முகமைக்கு முழுமையான அணுகல், வெளிப்படைத் தன்மை மற்றும் மேற்பார்வை வழங்கப்பட வேண்டும். ஈரான் தனது பிராந்தியத்தில் குறிப்பிட்ட இயக்கங்களுக்கு நிதியளிப்பதையும், வழிகாட்டுவதையும், ஆயுதம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி திறந்த நிலையிலேயே நீடிக்க வேண்டும். மேலும் அந்த ஜலசந்தி ஒரு சுதந்திரமான கடல்வழிப் பாதையாகச் செயல்பட வேண்டும்.
ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இதற்கான குறிப்பிட்ட வரம்புகள் பிற்காலத்தில் தீர்மானிக்கப்படும். எதிர்காலத்தில் ஏவுகணைகள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டால், அது தற்காப்பு நோக்கங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சர்வதேச சமூகம் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும் என்றும் ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது உள்ளிட்ட சிவில் அணுசக்தித் திட்டங்களுக்கு உதவி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா தெரிவித்துள்ள 15 அம்ச திட்டத்தை ஏற்க ஈரான் நிபந்தனைகளை விதித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் மூட வேண்டும். ஈரான் மீதான தாக்குதல்களுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும்.
எகிப்தின் சூயஸ் கால்வாயைப் போல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க ஈரானை அனுமதிக்க வேண்டும். போர் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்காது என்பதற்கான உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.
ஈரானுடன் இணைந்த லெபனான் போராளி குழுவான ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஈரான் மீது விதிக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். ஏவுகணைத் திட்டத்தை தக்கவைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.