‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு
தெஹ்ரான்: “நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார். நவ்ரூஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று வெளியிட்ட தனது செய்தியில், “இந்தப் பகுதியில் அமைதியின்மையை நாங்கள் விரும்பவில்லை என்பதை உலகுக்கு அறிவிக்கிறோம். எந்தவொரு நாடும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் குவித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, தங்கள் எல்லைகள் தாக்கப்படுமோ, இல்லையோ என்று எப்போதும் அச்சத்துடன் காத்திருக்கும் நிலையை நாங்கள் விரும்பவில்லை.
பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது குறித்து நாங்கள் எந்த வகையிலும் சிந்திக்கவில்லை. இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை நாங்கள் துளியும் விரும்பவில்லை. இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கைகோத்துச் செயல்படுவதன் மூலம் நாமே தீர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும். இந்தப் பிராந்திய நாடுகளுக்கான செய்தி இது: இந்தப் பகுதியில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கு ஈரானே காரணம் என்ற ஒரு கதையை உங்கள் சொந்த மக்களிடம் பரப்ப ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்தப் பகுதியில் நிலவும் அமைதியின்மை, உறுதியற்ற தன்மை, இனப்படுகொலைச் செயல்கள், பயங்கரவாதம் மற்றும் நாசவேலைகளுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்பதை நீங்கள் உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். முதலில், நமது நாட்டின் உன்னத மக்களுக்கு, நமது உன்னத தலைவரின் வீரமரணத்துக்காகவும், இந்த தேசத்தின் அர்ப்பணிப்புள்ள சேவகர்களுக்காகவும் எனது இரங்கலைத் தெரிவிப்பது அவசியமாகக் கருதுகிறேன்.
நாங்கள் அண்டை முஸ்லிம் நாடுகளுடன் மோதலை நாடுவதில்லை. நாங்கள் இஸ்லாமிய நாடுகளுடன் போரைத் விரும்பவில்லை; அவர்கள் எங்கள் சகோதரர்கள். நமக்குள் உருவாகியுள்ள பிளவுகள், முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் ஒரு துரோக எதிரியின் செயல்.
அன்பானவர்களே, உங்களுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளிடையே ஓர் இஸ்லாமியப் பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். அது பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். பிராந்தியத்தில் வெளிநாட்டு தலையீடு தேவையில்லை. நம் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உறவுகளை ஒருங்கிணைக்க, நாம் ஒன்றிணைந்து 'மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை' ஒன்றை உருவாக்கலாம். ஒருவருக்கொருவர் சண்டையிட நமக்கு உரிமை இல்லை. எந்தவொரு காரணத்தைக் கொண்டும், நமது எதிரிகள் நமக்காக அமைத்துள்ள கண்ணிகளில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது" என்று அவர் கூறினார்.