திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் இம்முறை மட்டும் தீபமேற்ற அனுமதி - நீதிமன்ற நிபந்தனைகளின் முழு விவரம்
தீபம் ஏற்றும் இடத்திற்குப் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதி கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மற்றும் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டுமே அப்பகுதிக்குச் செல்ல வேண்டும்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், நிரந்தரமாகத் தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நீதிபதிகள், கடும் பாதுகாப்பு நிபந்தனைகளையும் பிறப்பித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி:
கடந்த ஆண்டு மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். பாரம்பரிய நடைமுறைப்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்படும் எனக் கோயில் நிர்வாகம் பதிலளித்தது.இதனைத் தொடர்ந்து, ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்: இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில் வழக்கம்போல தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர்களின் பாதுகாப்போடு மனுதாரர் உள்ளிட்ட 10 பேர் மலை உச்சிக்குச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்ததோடு, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது
உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது கடந்த சில நாட்களாகத் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இன்று முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது:
தீபத்தூணில் நிரந்தரமாகத் தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.