”தனி ஒருவனாக ரூ.14 லட்சம் திரட்டிய சிறுவன்”; உற்று நோக்கும் உலக நாடுகள்
வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 6 வயது சிறுவன் எடுத்துள்ள முயற்சி உலக அரங்கில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பர்வெல் பகுதியைச் சார்ந்தவர் லியோ சோர்டெல்லா (12). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகள் மீது கொண்ட ஆர்வத்தினால், தனி இயக்கத்தைத் தொடங்கினார். இதன்படி, அழிந்து வரும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரானா தொற்றால் முடங்கிப்போனது. அந்த சமயத்தில், அழிந்துவரும் விலங்குகள் குறித்துப் பேசிய லியோ, யூடியூப் பக்கத்தைத் தொடங்கி அதில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
லியோவின் ஆழமான கருத்துக்கள் உலக அளவில் கவனம் பெற்றன. இதன்காரணமாக, ‘விலங்கு தொண்டு நிறுவனங்கள்’ மற்றும் ’காடுகளை மறுசீரமைக்கும் திட்டங்கள்’ ஆகியவற்றிற்காகத் தனது பிரச்சாரங்கள் மூலம் இதுவரை 13 ஆயிரம் பவுண்டுகள் (தோராயமாக ரூ.14 லட்சம்) நிதி திரட்டி சாதனை படைத்துள்ளார்.
லியோவின் இந்த அசாத்தியமான சுற்றுச்சூழல் மற்றும் விலங்கின பாதுகாப்புப் பணிகளைப் பாராட்டி, புகழ் பெற்ற இயற்கை ஆர்வலரான சர் டேவிட் அட்டன்பேரோ தனது கைப்பட எழுதிய வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார்.
அதோடு, லியோவின் இந்த சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, ’பிரிட்டிஷ் சிட்டிசன் இளைஞர்’ விருது மற்றும் ’லண்டன் ஈகோ சாம்பியன்’ விருது ஆகிய உயரிய விருதுகளை வழங்கி உள்ளது. தற்போது லியோ, ’பார்ன் பிரீ’ என்ற சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் இளநிலை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.