தேசிய விருதைப் பெற்ற தனுஷ், ஜி.வி.பிரகாஷ்; தமிழ் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!
இந்திய அரசு சார்பில் திரைத்துறை கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 1954ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டார்கள். இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை அள்ளியது.
குறிப்பாக சிறந்த தமிழ் படம் ‘ராயன்’, சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் படம் கேப்டன் மில்லர், சிறப்பு பிரிவு - தனுஷ்(கேப்டன் மில்லர்), சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி(அமரன்), சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார்(அமரன்), சிறந்த படத்தொகுப்பு - கலைவாணன்(அமரன்), சிறந்த சண்டைப் பயிற்சி - அனல் அரசு(மகாராஜா), சிறந்த துணை நடிகை - சச்சனா நமிதாஸ்(மகாராஜா), சிறப்புப் பிரிவு - சுரேண் ஜி(ஒலிக்கலவை - மெய்யழகன்) மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு - டி.எஸ். ஹரிஹர சுதன்(ப்ளூ - குறும்படம்) ஆகிய படங்கள் வென்றது.
இந்த நிலையில், 72வது தேசிய விருதுகள் நேற்று (22-09-26) குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது, சிறந்த படத்துக்கான தேசிய விருதை ராயன் படத்தின் இயக்குநரும் நடிகருமான தனுஷ், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றார். அதே போல், அமரன் படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை அந்தந்த கலைஞர்கள் பெற்றனர்.