இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
நிஷின்: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஓர் அணி குவித்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.
தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்களும், ஷபாலி வர்மா 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 99 ரன்கள் குவித்து மிரட்டியது.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சுகந்திகா குமாரி வீசிய 3-வது ஓவரில் மந்தனா தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மிதாலி அயோத்யா வீசிய அடுத்த ஓவரில் மந்தனா, எக்ஸ்டிரா கவர் திசையில் சிக்ஸர் விளாசினார். சமாரி அதப்பட்டு வீசிய 5-வது ஓவரில் ஷபாலி வர்மா சிக்ஸர்களை பறக்கவிட, மந்தனா தனது பங்குக்கு ஒரு சிக்ஸரை மைதானத்துக்கு வெளியே அனுப்பி அசத்தினார்.
இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசினார். முன்னதாக ஹர்மன்பிரீத் கவுர் 17 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பார்தி ஃபுல்மாலி 7 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி, சாமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 217 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை மகளிர் அணி, இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் சமாரி அதப்பட்டு 29, கவுஷினி நுத்யங்கனா 14, கவிஷா தில்ஹாரி 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டர்களும் இரட்டை இலக்கை ரன்னை எட்வில்லை. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஷபாலி வர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், சரணி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும். கடந்த 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. மேலும் நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது.