”ரஜினியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்” - ரிஷிகாந்த் வேண்டுகோள்
சமீபத்தில் வெளியான ’மொத ராத்திரி’ படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்கள் உட்படப் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.
குறிப்பாக இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரிஷிகாந்த், மக்களிடம் மிகுந்த கவனம் பெற்றதுடன், பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்த சூழலில், ரிஷி காந்த்தைப் பலரும் ரஜினியின் தோற்றத்தில் இருப்பதாகவும், நடிப்பு, உடல்மொழி உள்ளிட்ட சாயல்கள் அவருடன் ஒத்துப்போவதாகவும் கூறி வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய ரிஷி காந்த், ”ரஜினிகாந்த்துடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது குறித்து, தொடர்ச்சியாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. ஆரம்பத்தில் அதைக் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், அதை நான் விரும்பவில்லை. மாறாக, நான் செய்த செயலின் மூலமாகவே பிறரால் அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இவர் இதற்கு முன்பாக ஹீரோ, இந்தியன் 2 மற்றும் கூலி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக இந்த இடத்திற்கு வர, இவர் பல போராட்டங்களைச் சந்தித்து வந்துள்ளார். தற்போது தான் அவரது கனவு நிறைவேறியுள்ளது. அடுத்ததாக இவரது நடிப்பில் ’டோரதி’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.