"பினராயி விஜயன் மீது விசாரணைக்கு உத்தரவு" - அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று கேரள அரசு அதிரடி
அமலாக்கத்துறையின் பரிந்துரையை ஏற்று கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் மருமகனும் முன்னாள் அமைச்சருமான பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பினராயி விஜயன் கேரள முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கொச்சியைச் சேர்ந்த தனியார் தாது மணல் நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் அவரது மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் முறைகேடாக பணம் கைமாறியதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாகச் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் தொடர்ச்சியாக, கடந்த காலங்களில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், எக்ஸாலாஜிக் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் வீணா விஜயனுக்கு விளக்கம் கேட்டு அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையின் முடிவில், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து மகள் வீணா மூலம் பினராயி விஜயன் லஞ்சப் பணம் பெற்றதாகவும், அந்தத் தொகை ஹவாலா வழிகள் மூலமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.