காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இந்த விரிவாக்கத்தின் மூலம் 15,454 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்படவுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ல அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (22-09-26) விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அங்கு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கலை பரிமாறிய முதல்வர் விஜய், மாணவ மாணவியர்களுடன் இணைந்து அமர்ந்து காலை உணவை அருந்தினார். அதனை தொடர்ந்து அந்த பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறைகளுக்குச் சென்று முதல்வர் விஜய் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதுவரை தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நடுநிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என மொத்த 44,984 பள்ளிகளில் படிக்கும் 34.64 லட்சம் மாணவர்கள் பயனடைவுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.