ரூ.1000 கோடி செலவில் சபரிமலை, குருவாயூர் கோயில்களை திருப்பதி போல் மாற்ற ஆலோசனை: கேரள முதல்வர் வி.டி.சதீசன் தகவல்
திருவனந்தபுரம்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பரவூர் யூனியன் கூட்டம் எர்ணாகுளத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் வி.டி.சதீசன் கலந்து கொண்டு பேசியது: சபரிமலையில் மண்டல சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன.இவ்வருடம் சபரிமலையில் மிகச் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்படும். பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அரசு செய்யும். சபரிமலை ஐயப்பன் கோயிலையும், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலையும் திருப்பதி போல் மாற்றுவதற்கு ஆலோசனை உள்ளது. தேவைப்பட்டால் இதற்காக ரூ. 1000 கோடி வரை செலவு செய்ய தயாராக இருக்கிறோம்.
திருப்பதி கோயில் கட்டிட கலைஞர்கள் மற்றும் அங்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டவர்களை சபரிமலை மற்றும் குருவாயூர் கோயில்களை பார்வையிட வருமாறு அழைத்துள்ளோம். தெலங்கானா அரசின் உதவியையும் நாட தீர்மானித்துள்ளோம். இந்த ஆண்டு சபரிமலை சீசன் முடிந்தவுடன் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த கோயில்களுக்கு பக்தர்கள் வரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.