எடை விதியால் இறுதிப்போட்டி வாய்ப்பு இழப்பு: தற்காப்பு கலையில் சுச்சிகாவுக்கு வெண்கலம்
நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான கலப்பு தற்காப்பு கலை (எம்எம்ஏ) பாரம்பரிய 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் நேற்று இந்தியாவின் சுச்சிகா தரியால், சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவுடன் மோதினார்.
இந்த மோதலில் சுச்சிகாவும், ஹுய் ஹூன் தியோவும் தலா ஒரு சுற்றில் முன்னிலை பெற்றனர். இரு சுற்றுகளுக்குப் பிறகும் நடுவர்களால் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியவில்லை. இதையடுத்து ஒரு நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு வீராங்கனைகளும் தங்களது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் செயல் திறன்களை வெளிப்படுத்தினர்.
இதனால் முதலில் தியோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை இந்திய அணி எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதற்காக 1,000 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தப்பட்டது. புதிதாக 3 நடுவர்கள் சேர்க்கப்பட்டு போட்டி மீண்டும் மதிப்பிடப்பட்டது. அப்போதும் போட்டியின் முடிவு சமனாகவே இருந்தது. இதையடுத்து சர்வதேச எம்எம்ஏ கூட்டமைப்பின் விதிப்படி, போட்டிக்கு முன்னதாக காலையில் நடத்தப்பட்ட எடை பரிசோதனையில் குறைவாக எடை கொண்ட வீராங்கனை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.