மூன்றாவது அணி அமைக்க திமுக அச்சாரமா? - தாக்கரே, பவாரை அடுத்து மம்தாவை சந்தித்த எம்.பி. கனிமொழி
புதுடெல்லி: பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைக்க திமுக அச்சாரமிடுவதாகத் தெரிகிறது. உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை சந்தித்த எம்.பி. கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் நிறுவனர் மம்தா பானர்ஜியையும் சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இச்சூழலில், மீண்டும் தேசிய அரசியலில் 3-வது அணிக்கான பேச்சு தொடங்கிவிட்டது. இது, பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து அமைப்பதாக இருக்கும்.
இந்த முறை அதற்கான அடித்தளம் அமைப்பதில் முதன் முறையாக திமுக இறங்கி உள்ளது. இதன்மூலம், தேசிய அரசியலில் தனது பங்கை திமுக மறுவரையறை செய்ய முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கான பொறுப்பை திமுகவின் துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி ஏற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2007-ல் முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக அமர்த்தப்பட்டார். அப்போது முதல் அவரது நட்பு தேசிய தலைவர்களிடம் உருவாகி வளர்ந்துள்ளது.
தற்போது, தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியாக இருப்பவருக்கு, தேசிய அரசியல் கூட்டங்களிலும் முக்கியப் பங்கு இருந்து வருகிறது. இதனால், எம்.பி. கனிமொழியே இந்த பணிக்கு பொருத்தமானவர் என திமுக கருதியுள்ளது.
கடந்த சில காலமாகவே பல முக்கிய பிராந்தியத் தலைவர்களை கனிமொழி சந்தித்து வருகிறார். கடந்த 12-ல் மும்பை சென்றவர் சிவசேனா யுபிடி கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரேவைச் சந்தித்தார். இது, தொகுதி மறுசீரமைப்பிற்கானதாக தாக்கரே தரப்பில் கூறப்பட்டது.