“பெண்கள் விளையாட்டில் சாதிக்க குடும்பத்தினரின் ஆதரவு அவசியம்!” - பி.டி.உஷா
20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி - நகோயா மாகாணங்களில் நாளை (செப்டம்பர் 19) தொடங்கவுள்ளன. தடகளம், பாட்மிண்டன், கிரிக்கெட், பாய்மரப் படகுப் போட்டி எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 501 வீரர் - வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 36 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்திய அணியோடு ஜப்பான் விரைந்திருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவோடு நடத்திய நேர்காணலில் இருந்து:
தடகள வீராங்கனையாக இருந்ததால், விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், எதிர்பார்ப்புகள், தியாகங்கள் ஆகியவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் போட்டிகளில் பங்கேற்ற காலத்தில் பயிற்சி வசதிகளும் ஆதரவும் குறைவாக இருந்தன. ஆனால், இன்றைய சூழலில் வீரர்களுக்குச் சிறந்த உள்கட்டமைப்பு, நவீன உபகரணங்கள், விளையாட்டு அறிவியல் சார்ந்த ஆதரவு கிடைக்கிறது.
அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA), தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து இந்த ஆதரவை வழங்குகின்றன. கேலோ இந்தியா, ‘TOPS’ போன்ற திட்டங்களும் வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், உடல் இயக்க நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உளவியலாளர்கள் எனப் பலரும் வீரர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த ஒட்டுமொத்த ஆதரவுக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இந்திய வீரர் - வீராங்கனைகள் சிறப்பாகப் பயிற்சி பெற்றுத் தயாராகி உள்ளனர். ஆனால், பதக்க இலக்கு என எதையும் நிர்ணயிக்க வேண்டாம் என நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை இலக்காக நிர்ணயிப்பது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். பதக்கங்களைப் பற்றிச் சிந்திக்காமல் பயிற்சி, போட்டிக்கான தயாரிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்தித் தங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும், நல்ல முடிவுகள் கண்டிப்பாக வரும்.