கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்தத் தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு
மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ், உட்கட்சி பூசல் காரணமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவருகிறது. முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு அணியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு வருகின்ற அக்டோபர் 6 அன்று நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ரிதப்ரதா பானர்ஜியின் தலைமையிலான அணி தங்களிடம் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், சின்னத்திற்கும் உரிமை கோரினர். மம்தா பானர்ஜி தலைமையிலான அணி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (17-09-26) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”திரிணமூல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னத்துக்கு இருதரப்பினர் உரிமை கோரும் விவகாரத்தில் தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) சட்டம், 1968-இன்கீழ் விரிவான ஆய்வு தேவைப்படுவதால் தற்காலிகமாக இருதரப்பும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. அதனால், வரவுள்ள இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிட விரும்பும் பெயர் மற்றும் சின்னத்தை வெள்ளிக்கிழமை (18-09-26) காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, வருகின்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள 2 தொகுதிகளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் திறனாய்வாவார்கள் கணித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிக்கல், அக்கட்சியினரிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.