ஆஜராக வேண்டியவரே விசாரிப்பதா? மரபு மீறுவதில் திமுக ரூட்டில் தவெக' - முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார்
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் உரிமைக் குழு, சபை விதிகள் குழு, பொது நிறுவனங்கள் குழு உள்ளிட்ட 11 குழுக்களை நியமித்து உத்தரவிட்டார் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர். சட்டப்பேரவை விதிகளின்படி புதிய சட்டமன்றங்கள் அமையும் போது பொறுப்பேற்கும் அரசு இந்தக் குழுக்களை நியமிப்பது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்கள் தொடர்பாக சலசலப்பு கிளம்பியிருக்கிறது.
இது தொடர்பாக சட்டப்பேரவை வட்டாரத்தில் விவரமறிந்த சிலரிடம் பேசிய போது, ``புது அரசு பொறுப்பேற்றதும் சபை விதிகள் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுக்கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, உரிமைக்கழு என பதினாறு குழுக்கள் நியமிக்கப் படுவது வழக்கம். சபை விதிகள் குழுவுக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருமே இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
அதேபோல் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது அவரால் பரிந்துரை செய்யப்படும் எதிர்க்கட்சி உறுப்பினரோ பொறுப்பு வகிப்பார்கள்.