அரசு மருத்துவமனைகளில் 1,695 புதிய செவிலியர் பணியிடங்கள் – ரூ.42.72 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மருத்துவச் சேவையை மேம்படுத்தும் நோக்கில், 1,695 புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.42.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026–27ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நவம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. புதிய பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளாக செவிலியர் பணியிடங்களுக்கு வழக்கமான நிரந்தர ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை. இதனால் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பணியிடங்கள் மூலம் மருத்துவமனைகளில் பணியாளர் பற்றாக்குறையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் மாவட்ட சுகாதாரச் சங்கங்கள் மூலம் 4,724 செவிலியர்கள் தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏழு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் மூலம் 2,585 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான சேர்க்கை நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பணியிடங்கள் மூலம் செவிலியர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புச் சேவைகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.