இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்!
இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையிலான ஆறாவது கூட்டு ராணுவப் பயிற்சியான 'ஹரிமாவ் சக்தி – VI' (HARIMAU SHAKTI–VI) நவம்பர் 19ஆம் தேதி மலேசியாவின் ஈப்போ (Ipoh) நகரில் தொடங்கியது. நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் இந்தியா மற்றும் மலேசியா ராணுவத்தைச் சேர்ந்த தலா 120 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இரு நாடுகளும் மாறி மாறி நடத்தும் இந்தப் பயிற்சி, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், அடர்ந்த வனப்பகுதிகளில் போர் பயிற்சி மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், கூட்டு ராணுவக் கட்டளை மையம் மற்றும் கண்காணிப்பு மையம் அமைத்தல், தேடுதல் நடவடிக்கைகள், அதிரடித் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்துதல் போன்ற பயிற்சிகளும் இடம்பெறுகின்றன.
இந்த முறை ஆளில்லா ட்ரோன்களைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது, கண்காணிப்பது மற்றும் எதிரிகளின் ட்ரோன்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்வது போன்ற நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இறுதிக்கட்டத்தில் இரு நாட்டு வீரர்களும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். இந்தப் பயிற்சியின் மூலம் இரு நாடுகளின் ராணுவத் திறன், செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.