சென்னை ஓபன் டென்னிஸ் மாக்தா லினெட் சாம்பியன்
சென்னை: டபுள்யூ.டி.ஏ சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை மாக்தா லினெட் சாம்பியன் பட்டம் வென்றார். நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் அரங்கில் ஞாயிறன்று நடைபெறுவதாக இருந்த பைனல், கனமழை மற்றும் தீபாவளி பட்டாசுகளின் புகைமூட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீராங்கனையுமான ஜானிஸ் டிஜென்னுடன் (இந்தோனேசியா) மோதிய மாக்தா லினெட் 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.
பின்னர் சுதாரித்துக்கொண்டு அதிரடியாக விளையாடி டிஜென்னின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த மாக்தா 6-1 என்ற கணக்கில் 2வது செட்டை மிக எளிதாகக் கைப்பற்றி 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 2 மணி, 43 நிமிடங்களுக்கு நீடித்த விறுவிறுப்பான பைனலில் மாக்தா லினெட் 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று சென்னை ஓபன் கோப்பையை முத்தமிட்டார்.
இது அவர் வென்ற 4வது டபுள்யூ.டி.ஏ பட்டமாகும். 2022லும் சென்னை ஓபன் பைனலுக்கு முன்னேறி இருந்த லினெட் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் லிண்டா புர்ஹ்விட்ரோவாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியின் 3வது செட்டில் லினெட் 4-1 என முன்னிலை வகித்த நிலையில், லிண்டா தொடர்ச்சியாக 5 கேம்களைக் கைப்பற்றி வெற்றியை தட்டிப் பறித்தார்.
2022 தோல்வியின் சோக நினைவுகளுக்கு விடைகொடுத்த லினெட்நேற்று மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார். மற்றும் சுவிஸ் ஜோடி சாம்பியன் ஞாயிறன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ - சிமோனா வால்டெர்ட் இணை 6-2, 6-0 என்ற நேர் செட்களில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் - ருதுஜா போசலே ஜோடியை மிக எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.